Winwinx academy

வீட்டிலேயே குழந்தைகள் விளையாடி கணிதம் கற்க 10 சுவாரஸ்யமான Mental Maths Games

by | Oct 22, 2026

மனக்கணித-விளையாட்டுகள் | Winwinx Academy

சிறப்பம்சங்கள்

  1. தாளில் தவறான விடை எழுதினால் சிவப்புக் கோடு விழும். அதே விளையாட்டில் தவறானால் கிடைப்பது “அடுத்த சுற்று”.
  2. இரவு உணவுக்குப் பிறகு பத்து நிமிடம் மனக் கணக்கு விளையாட்டே  போதுமானது .
  3. ஒரு பகடை, சிறிய காகிதம், ஒரு பென்சில், இருந்தால் போதுமானது.
  4. இந்தப் பட்டியலில் மனக் கணக்கு விளையாட்டுகள் உண்டு, யோசிக்க வைக்கும் கணித விடுகதைகளும் உண்டு.
  5. இன்று இரவே ஏதாவது ஒன்றை ஆரம்பியுங்கள். மற்ற ஒன்பதை வாரம் முழுவதும் பிரித்துக்கொள்ளலாம்.

இரவு உணவு முடிந்து, தட்டுகள் கழுவி வைத்தாகிவிட்டது. அப்போதுதான் நீங்கள் குழந்தையிடம் சொல்கிறீர்கள்: “கணக்கு நோட்டை எடு.”

பத்து நொடிக்குள் வயிற்று வலி வந்துவிடுகிறது. பென்சில் எங்கோ காணாமல் போகிறது. திடீரென்று தாகமும் எடுக்கிறது, அதுவும் சமையலறையின் கடைசி மூலையில் இருக்கும் தண்ணீர் டம்ளரால் மட்டுமே தீருமாம்.

இந்த மாலை பெரும்பாலான வீடுகளில் நடந்திருக்கும். குழந்தையின் மேல் கோபப்படவும் மனம் வராது. அதன் பார்வையில் கணக்கு என்பது தவறு செய்தால் சிவப்பு மையும் பெருமூச்சும் கிடைக்கும் பாடம். கூடவே, “பக்கத்து வீட்டுப் பையன் ரெண்டு நிமிஷத்துல முடிச்சுடுவான்” என்ற ஒப்பீடும் வந்து சேரும். ஓடத்தானே தோன்றும் குழந்தைகளுக்கு ?

இப்போது வேறு விதமாகக் கேட்டுப் பாருங்கள்: “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” அதே குழந்தை, அதே எண்கள், ஆனால் இந்த முறை உட்கார்ந்துவிடுகிறது.

இந்தப் பட்டியலின் நோக்கம் அதுதான். பத்து விளையாட்டுகள், ஒவ்வொன்றிலும் ஒரு சின்ன மனக்கணிதம் ஒளிந்திருக்கும். சில, எண்களைத் தலைக்குள் படமாகப் பார்க்க விரும்பும் குழந்தைகளுக்கு. சில கணிதப் புதிர்கள், யோசித்துக் கண்டுபிடிக்க விரும்புபவர்களுக்கு. ஒரு பகடை, காகிதம், ஐந்து நிமிடம் இருந்தால் போதும்.

நோட்டில் வராத ஆர்வம் விளையாட்டில் எப்படி வருகிறது?

மனக்கணிதம் என்றால் பென்சில் இல்லாமல், விரல் எண்ணாமல், தலைக்குள்ளேயே கூட்டிக் கழித்துப் பார்ப்பது. எண்களைப் பிடித்து வைத்து, பிரித்து, மறுபடி சேர்க்க வேண்டும். இது நல்ல மூளை வேலை. ஆனால் கட்டாயப்படுத்தினால் தண்டனை போலத் தோன்றும்.

அதே வேலையை விளையாட்டுக்குள் வைத்துப் பாருங்கள். பக்கத்தில் பத்துக் கணக்குகளுக்கே பெருமூச்சு விடும் குழந்தை, பகடைப் போட்டியில் நாற்பது கணக்குகளைக்கூட ஆர்வமாகப் போடும். ஏனென்றால் அங்கே யாரும் மதிப்பெண் போடுவதில்லை. புள்ளிகள் உண்டு, ஆனால் அது விளையாட்டுப் புள்ளி, தீர்ப்பு அல்ல.

இன்னொன்று, எந்த ஒரு விளையாட்டையும்விட இது முக்கியம்: தினமும் ஐந்து நிமிடம் செய்யும் மனக் கணக்கு செயல்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சும்ம உட்காருவதைவிட அதிகப் பலன் தரும். மூளைக்குத் திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்கும். சலிப்புதான் பிடிக்காது.

இன்றே விளையாடத் தொடங்க 10 விளையாட்டுகள்

1. பகடைப் போட்டி

இரண்டு பகடைகளை உருட்டி, கூட்டுத்தொகையைத் தலைக்குள் கணக்கிட்டுச் சத்தமாகச் சொல்ல வேண்டும். முதலில் சொல்பவருக்கு ஒரு புள்ளி, பத்துப் புள்ளி எடுப்பவர் வெற்றி. சிறிய குழந்தைகளுக்கு ஒரே பகடையில் வரும் எண்ணுடன் 5-ஐக் கூட்டச் சொல்லலாம். பெரியவர்களுக்கு மூன்று பகடை, அல்லது கூட்டலுக்குப் பதில் பெருக்கல்.

2. இரட்டிப்பு, பாதி

24 என்று சொல்லுங்கள். ஐந்து எண்ணுவதற்குள் அதன் இரட்டிப்பு 48-ஐயும் பாதி 12-ஐயும் குழந்தை சொல்ல வேண்டும். சுலபம் என்று நினைத்தால், 86-ஐப் போட்டுப் பாருங்கள்.

3. வீட்டுக் கடை

சமையலறைப் பொருட்களில் விலைச்சீட்டு ஒட்டுங்கள். கடைக்காரர் உங்கள் குழந்தை. ₹37 விலையுள்ள பிஸ்கட் பாக்கெட்டுக்கு நீங்கள் ₹100 நோட்டைக் கொடுத்துவிட்டுச் சில்லறைக்காகக் காத்திருங்கள். பென்சிலைத் தொடாமலே “₹63” என்று வந்துவிட்டால், கழித்தலும் கடை நடத்துவதும் ஒரே நேரத்தில் முடிந்தது. ஒரு வாரம் இந்தக் கடை நடந்தால், கழித்தல் மீதிருக்கும் பயம் கரைந்துவிடும்.

4. எண் தொடர் புதிர்கள்

“3, 6, 12, 24, ___” என்று எழுதி விட்டுப் பொறுமையாகக் காத்திருங்கள். ஒவ்வொரு எண்ணும் இரட்டிப்பாவதால் விடை 48. அடுத்து “2, 5, 8, 11, ___” தந்தால், ஒவ்வொரு முறையும் 3 கூடி 14 வரும். இந்தக் கணிதப் புதிர்கள் ஃப்ரிட்ஜ் கதவில் ஒட்டி வைக்கும் அளவுக்குச் சிறியவை. தண்ணீர் குடிக்கப் போகும் வழியிலேயே குழந்தைகள் விடை சொல்லிவிடுவார்கள்.

மேலும் படிக்க – Abacus மூலம் பெருக்கல், வகுத்தல்: எளிய எடுத்துக்காட்டுகளுடன்

5. சாப்பாட்டு மேசையில் கணித விடுகதைகள்

உங்கள் வீட்டில் விடுகதை போடும் வழக்கம் இருந்தால், பாதி வேலை முடிந்துவிட்டது. அதில் கொஞ்சம் எண்களைச் சேர்த்தால் புதிய விளையாட்டு தயார்.

“நான் ஒரு எண். என்னை 5-ஆல் பெருக்கி, 3 கூட்டினால் 18 வரும். நான் யார்?” (விடை 3.)

“என்னிடம் 12 லட்டு இருந்தது. பாதியைத் தம்பிக்குக் கொடுத்தேன், 2-ஐ நானே சாப்பிட்டேன். இப்போது எத்தனை இருக்கு?” (விடை 4. “நானே சாப்பிட்டேன்” என்பதை நம்புவதா வேண்டாமா என்பது வேறு கதை.)

பிறகு விடுகதை போடும் பொறுப்பைக் குழந்தையிடம் கொடுங்கள். ஒன்றைக் கண்டுபிடிப்பதைவிட, ஒன்றை உருவாக்குவது கடினம். அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதும் உங்களுக்குப் புரிந்துவிடும்.

6. பத்தை உருவாக்கு

1 முதல் 9 வரை எண்கள் எழுதிய அட்டைகளைப் பரப்பி வையுங்கள். கூட்டினால் பத்து வரும் இரண்டு அட்டைகளை முதலில் எடுப்பவருக்கு வெற்றி. 3-7, 4-6 போன்றவை “பத்தின் நண்பர்கள்”. இவை மனப்பாடமாகிவிட்டால் பெரிய கூட்டல்கள் எளிதாகிவிடும். அட்டைகளைப் பையில் போட்டு வைத்துக்கொண்டால், மருத்துவமனையிலோ வங்கியிலோ காத்திருக்கும்போது அதுவே ஒரு சின்னக் கணிதப் புதிர் ஆகிவிடும்.

7. கடிகாரத்தை வெல்லுங்கள்

பத்து எளிய கணக்குகள், இரண்டு நிமிடம். நாளைக்கு அதே பத்து, இன்னும் கொஞ்சம் குறைவான நேரத்தில். இங்கே போட்டி, நேற்றைய தன்னோடுதான் என்பதால் யாரும் தோற்பதில்லை. ஏழு வயதுக் குழந்தை தன் சொந்தச் சாதனையை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

8. சமையலறைத் தேடல்

சமையலறையிலிருந்து ஏழு பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவை மேசையில் வரிசையாக வந்ததும், “மூன்றைத் திரும்பக் கொண்டுபோய் வை. இப்போது எத்தனை இருக்கு?” என்று கேளுங்கள். தொட்டுப் பார்த்துச் செய்த கணக்கு தலையில் நன்றாகத் தங்கும்.

9. கண்ணுக்குள் அபாகஸ்

இந்தப் பட்டியலில் உள்ள மூளைக் கணக்கு விளையாட்டுகள் எல்லாவற்றிலும் இது கொஞ்சம் மாயம் போலத் தோன்றும். குழந்தையைக் கண்ணை மூடச் சொல்லுங்கள். ஒரே ஒரு அபாகஸ் கம்பியை நினைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். “6 மணிகளை மேலே தள்ளு. 2-ஐ எடு. இன்னும் 5 சேர்த்துக்கொள். இப்போது எத்தனை மேலே இருக்கு?” விடை 9. அபாகஸ் கற்ற குழந்தைகளுக்கு இது எளிது. மற்றவர்களும் முயற்சி செய்யலாம். படத்தைத் தலைக்குள் பிடித்து வைக்கும் இந்தப் பழக்கம் கவனத்துக்கு அருமையான பயிற்சி.

மேலும் படிக்க – அபாகஸ் பயிற்சி குழந்தைகளின் கவனத்தை எப்படி மேம்படுத்துகிறது

10. நான் நினைக்கும் எண்

“நான் ஒரு எண்ணை நினைத்திருக்கிறேன். அதை இரட்டிப்பாக்கி 4 கூட்டினேன், 14 வந்தது. நான் நினைத்த எண் எது?” குழந்தை பின்னோக்கிப் போக வேண்டும். 14-இலிருந்து 4-ஐக் கழித்தால் 10, அதன் பாதி 5. பின்னோக்கிச் சிந்திப்பது பெரியவர்களுக்கான திறமை. ஆனால் துப்பறியும் வேலை போலத் தோன்றுவதால் குழந்தைகளுக்கு இது ரொம்பப் பிடிக்கும்.

இதைப் பழக்கமாக்குவது எப்படி?

பத்தையும் இந்த வாரமே விளையாட வேண்டியதில்லை. சிறிதாகத் தொடங்குங்கள்:

  • தினம் ஒரு விளையாட்டு, அதிகபட்சம் பத்து நிமிடம். பல் துலக்குவது போல இதுவும் அன்றாடப் பழக்கமாகிவிடும். இந்த மனக் கணக்கு செயல்பாடுகள் ஐந்து நிமிடமாக இருந்தாலும் போதும்.
  • ஒரே நேரம். பெரும்பாலான வீடுகளில் மாலைச் சிற்றுண்டி முடிந்ததும் சரியாக அமையும்.
  • தவறான விடை வந்தால் “தப்பு” என்று சொல்லாமல், “இன்னொரு முறை முயற்சி பண்ணலாமா?” என்று கேளுங்கள்.
  • “எப்படிக் கண்டுபிடிச்ச?” என்று கேளுங்கள். விடையைவிட வழிதான் முக்கியம்.
  • வாரத்தில் ஒரு நாள் விளையாட்டை நடத்தும் பொறுப்பை அவர்களிடமே கொடுங்கள்.

குழந்தை சலித்துக்கொள்கிறதா? அன்றைக்கு நிறுத்திவிடுங்கள், உண்மையாகவே. கட்டாயப்படுத்திய விளையாட்டு மறுபடி வீட்டுப்பாடமாகிவிடும். அப்புறம் காணாமல் போகும் பென்சிலுக்குத் திரும்பவும் வந்துவிடுவோம்.

வீட்டு விளையாட்டுகளுக்கு மேல், இன்னும் கொஞ்சம் தேவைப்படும்போது

வீட்டு விளையாட்டுகள் எண்களை நண்பனாக்கப் போதுமானவை. சில குழந்தைகளுக்கோ, எங்கே தடுமாறுகிறார்கள் என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்கும் ஒரு பயிற்சியாளரும், படிப்படியான வழியும் தேவைப்படும். அபாகஸ் பயிற்சி அப்படிப்பட்ட ஒரு வழி. எண்களைத் தலைக்குள் படமாகப் பார்த்துக் கணக்கிடக் கற்றுத்தருவது அதன் அடிப்படை. இந்த விளையாட்டுகள் முறைசாரா முறையில் பயிற்றுவிக்கும் அதே திறன்தான் அது.

மேலும் படிக்க – அபாகஸ் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது

ஏன் இது முக்கியம்?

பெரியவர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணக்குகளை நினைத்துப் பாருங்கள். கடையில் சில்லறை சரிபார்ப்பது, தள்ளுபடி எவ்வளவு என்று கண்டுபிடிப்பது, பயணத்துக்கு எவ்வளவு நேரமாகும் என்று ஊகிப்பது. இவை எல்லாமே தலைக்குள்தான் நடக்கின்றன.

சிறுவயதிலேயே எண்களோடு விளையாடும் குழந்தை, அவற்றைக் கண்டு பயப்படாத மனிதராக வளர்கிறது. தினமும் விளையாடும் மூளைக் கணக்கு விளையாட்டுகள் அவர்களின் கவனத்தையும் நினைவாற்றலையும் மெல்ல மெல்லக் கூர்மையாக்குகின்றன. கடினமான கணக்கு வந்தால் அவர்கள் முதலில் “முயற்சி பண்ணிப் பார்க்கலாம்” என்றுதான் நினைப்பார்கள், “என்னால முடியாது” என்று அல்ல. எந்த மதிப்பெண்ணும் இதற்கு ஈடாகாது.

இறுதிச் சிந்தனை

இன்று இரவே ஒரு பகடையுடன், ஐந்து நிமிடத்துடன் தொடங்குங்கள். மனக் கணக்கு விளையாட்டுகள் ஒரு தொடக்கம் மட்டுமே. அவை சிறப்பு நிகழ்வாக இல்லாமல், சாதாரண மாலை நேரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் நன்றாகப் பலன் தருகின்றன. உங்கள் குழந்தை இதே திறன்களைப் படிப்படியான பாதையில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், Winwinx Academy-யின் Abacus வகுப்புகள் புதிர்கள், ஃப்ளாஷ் கார்டுகள், நினைவாற்றல் விளையாட்டுகள், மனக்கணிதப் பயிற்சி எல்லாவற்றையும் ஒன்றாக்கித் தருகின்றன. அதனால் கற்றல் எப்போதும் விளையாட்டாகவே இருக்கும்.

FAQ’s :

  1. எந்த வயதிலிருந்து குழந்தைகள் இந்த விளையாட்டுகளை ஆரம்பிக்கலாம்?

எளிய எண்ணுதல், கூட்டல் விளையாட்டுகளை 4 அல்லது 5 வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். குழந்தை வளர வளர, பெரிய எண்கள், அதிகப் பகடைகள், குறைந்த நேரம் என்று அதே விளையாட்டுகளைக் கடினமாக்கிக்கொள்ளலாம்.

  1. தினமும் எவ்வளவு நேரம் விளையாடலாம்?

பத்து முதல் பதினைந்து நிமிடம் போதும். அடிக்கடி, சிறிது நேரம் என்பது அரிதாக, நீண்ட நேரம் என்பதைவிட நல்லது.

  1. குழந்தை ஒரு கணிதப் புதிர் முன் திணறினால் என்ன செய்வது?

விடையை உடனே சொல்லிவிடுவதை தவிர்க்கவும். சின்ன ஒரு குறிப்பு கொடுங்கள், அல்லது கேள்வியைக் கொஞ்சம் எளிதாக்குங்கள். தானாகக் கண்டுபிடித்த விடை நன்றாக நினைவில் நிற்கும், அதில் ஒரு பெருமையும் இருக்கும். விடுகதைகள் பிடிக்கும் குழந்தையாக இருந்தால், உங்களுக்காக அவர்களையே சில கேள்விகள் உருவாக்கச் சொல்லுங்கள்.

0 Comments

Start Your Journey with Us

Enroll your child in Abacus Classes for a joyful learning experience, where curiosity thrives and friendships bloom.